Thursday, February 9, 2017

மன்னார்குடியும் மாஃபியாவும்

நான் ஜெயலலிதாவை முதலும் கடைசியுமாக நேரடியாக பார்த்தது மன்னார்குடியில்தான். ராஜகோபாலஸ்வாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 1990களில் வந்திருந்தார். தெற்குவீதியில் நின்றிருந்தபோது காரில் வணக்கம் சொல்லியபடி சென்றார். அன்றுதான் என் உறவினர் கண்ணப்பா மாமாவையும் முதன்முதலில் பார்த்தேன். கும்பாபிஷேகம் பற்றி கட்டுரை எழுத வந்திருந்தார். விதுரன் என்கிற பெயரில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.  அவரும் ஜெயலலிதா போலவே திடீரென மரணம் அடைந்தார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீநிவாச ராகவன் என்றால் சிலர் அறிந்திருக்கக்கூடும்,

மன்னார்குடி என் ஊர். என் அப்பாவின் ஊர் அதுவல்ல. திருவாரூர் அருகே  வேளுக்குடி என்னும் கிராமம்.  என் குழந்தைகளுக்கும் அது சொந்த ஊர் அல்ல. ஆகவே, எனக்கு மட்டுமான ஊர் என சொல்லலாம். நான் ஆறாவது படிக்கும்போது அங்கு வந்தோம். பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தோம். மன்னார்குடியை பற்றி சொல்லவேண்டுமெனில் அங்குள்ள குளங்களை பற்றி சொல்லவேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்த முதல்தெருவை சுற்றியே மூன்றுகுளங்கள் இருந்தன. ஆனால் குளிக்க போகவேனும் எனில் அரைமைல் நடந்து கோபிநாதன் கோயில் குளத்திற்குத்தான் செல்லவேண்டும். இவைகளைத்தவிர பல குளங்கள் இருந்தன. காவிரியின் கிளைஆறான பாமணியில் வரும் தண்ணீரை சேமிக்க முடிகிற வகையில் அருகருகே குளங்கள் இருக்கும்.   மிக கச்சிதமாக தாயக்கட்டத்தில் கோடு போட்டதைப்போல ஒரே அளவில் பிரிக்கப்பட்டு நன்றாக திட்டமிடப்பட்டு உருவான நகரம் அது.

பெரிய தெப்பகுளம் எனப்படும் ஹரித்ராநதியில் மதகு வழியே காவிரி தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். மன்னார்குடி தெப்பகுளம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்று. அதன் நடுவே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இப்போது படகில் போய் வரலாம். நான் நீந்திப்போயிருக்கிறேன்.


ஆனிமாதம் தெப்ப உற்சவம் நடக்கும். அந்நாளில் அந்த குளத்தின் கரைகளில் உள்ள மாடங்களில் அகல் விளக்கு ஏற்றுவோம். இதுதவிர பங்குனி மாதம் பதினெட்டு நாட்கள் ராஜகோபாலனுக்கு உற்சவம் நடக்கும். அப்போது கோபாலன் நகர் உலா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என. இது தவிர அமாவசை, ரோஹிணி நட்சத்திரம், ஸ்ரவண நட்சத்திரம் கூடி வரும் நாட்களில் கோயிலுக்குள் கோபாலன் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமைதோறும் செங்கமலத்தாயார் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமையும் மேற்படி தினங்களும் கூடி வருகையில் இரட்டைப்புறப்பாடு நிகழும். புறப்பாடுகளில் பிரபந்தம் வாசித்தபடி முன்னால் செல்ல பின்னால் பெருமாள் வர அவருக்குப் பின்னால் வேதம் ஓதியபடி வருவார்கள். தமிழ் முன்னால் செல்ல அவ்வழியே பெருமாள் வர பின்னால் அவரைத்தேடி வேதம் வருகிறது என சொல்வார்கள்.



மன்னார்குடி கோயிலின் ராஜகோபுரமானது இந்தியாவின் உயரமான கோபுரங்களில் முதல் பத்துக்குள் வரக்கூடியது. கோவிலைசுற்றி உயரமான மதில்கள் உண்டு. மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு என சொல்வடை உண்டு. மன்னார்குடி கோயிலுக்கு மதிலழகைப் பார்க்கப் போனேன் என புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலான பாடல் உண்டு. ( தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்ய போனேன், சீரகம் பாத்திக் கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி என்று அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகப்பிரபலம். )

 உள்ளே நூற்றுங்கால் மண்டபம், ரோஹிணி மண்டபம் என கோயில் மிக பிரம்மாண்டமானது.

தாயாருக்குத் தனி கொடிக்கம்பம், கருடி சந்நிதி, தனி பிரகாரம் உண்டு
கோயிலில் ஒரு அழகான யானையும் உண்டு. செங்கமலம் என்று பெயர். செங்கம்மா என்று
அழைப்பார்கள். குழந்தைகளுக்கு தலையில் கைவைத்து குஷியாக்கும்.
மதியம் மூணு மணியளவில் சென்றால் யானை குளிப்பதை பார்க்கலாம்.

ராஜகோபாலன் மிக அழகு. மணிநூப்புரதாரி ராஜகோபாலா என்கிற தெலுங்கு கீர்த்தனையை கேட்டுப்பாருங்கள். மிக அழகான பாடல். அருணா சாய்ராம் குரலில் யூட்யூபில் இருந்தது.  பிறகு தூக்கிவிட்டார்கள். பதினெட்டு நாட்கள் உற்சவத்தின் போது இரவில் கடைத்தெரு வழியாக புறப்பாடு வருவதைப்போல பகலில் கோவிலை சுற்றியும் தெப்பகுளம் சுற்றியும் புறப்பாடு நிகழும். இதுவும் வேறு அலங்காரம். வைரமுடி, காளிங்க நர்த்தன சேவைகள் எல்லாம் அந்நேரங்களில்தான்.

கலை இலக்கிய இரவு எங்கள் ஊரில் மிக பிரசித்தம். பந்தலடி அருகே இரவு முழுவதும் கூட்டம் நடக்கும். அல்லது கோயில் அருகே. காலை பீப் லேந்து மாலை பீப் வரை வேலை பீப் செய்து கூலி பீப் கேட்டவனை பீப் சொல்லி திட்ட்டும் முதலாளி பீப் பற்றிய பாடல் அங்குதான் முதலில் கேட்டேன். படிச்சவன பன்னி மேய்க்க சொன்னான் பன்னிக்கெல்லாம் மினிஸ்டர் போஸ்ட்டு தந்தான் என்ற பாடலை கேட்டு ரசித்து கைதட்டி சிரித்து நின்றிருக்கிறேன். பொன்னீலன் குன்றக்குடி அடிகளார் பற்றி பேசிய உரை இன்னும் ஞாபகம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். பொன் விளைகிற பூமி என்று சொல்லப்படும்.  இப்போது நிலக்கரி கிடைக்கிறது. மீத்தேன் கிடைக்கிறது என கிளம்பியிருக்கிறார்கள். பழுப்பு நிலக்கரி இல்லை ராவாகவே கிடைக்கிறது என சிலர் சொல்கிறார்கள். அதற்கேற்றார் போல தண்ணீரும் வருவதில்லை. முன்பு காவிரியில் தண்ணீர் வருகிறது என கீழப்பாலம் அருகே நின்று தண்ணீர் கணுக்காலில் பின் ஆடுசதையில் பின் இடுப்பளவு என குப்பைகளை சேர்த்து வர நடுவே கும்மாளமிடுவோம்.இப்போது தண்ணீர் அவ்வளவாக வருவதில்லை.  வண்டிகளில் மணல் அள்ளுகிறார்கள். மிகச் சமீபத்தில் விக்னேஷ் என்னும் ஒரு இளைஞன் காவிரி தண்ணீர் வரவில்லை என தீக்குளித்தான்.

இதுபோல என்னிடம் மன்னார்குடி பற்றி சொல்ல இன்னும் பல விஷயங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சொல்லிவிட ஆசைதான். ஆனாலும், சொந்த ஊர் மன்னார்குடி என்று நான் சொன்னதும், ஓஹோ!! மாஃபியா ஊருன்னு சொல்லுங்க.. என சிரிப்பவர்களுக்கு என சொல்ல சில விஷயங்கள் உண்டு. நீங்கள் சொல்லும் மாஃபியா கட்சி மன்னார்குடி எம் எல் ஏ வாக ஆனது என் பதின் பருவத்தில்.  அதன் பின் இன்று வரை இல்லை. இது முழுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் கோட்டை. கூட்டணி யாராக இருந்தாலும் இடது சாரிகள் வெல்வார்கள் .  திமுக மீது மிக அபிமானம் உண்டு. இடதுசாரிகள் ஜெயிக்காத நேரங்களில் திமுக ஜெயித்திருக்கிறது. கலைஞர் திருவாரூர் காரர். இன்னொரு அமைச்சருக்கு வடசேரியில் தொழிற்சாலை உண்டு. மாஃபியாவை  வாழவைக்கும் மற்ற ஊர்க்காரர்களுக்கு மாபியாவை சொந்தமாக்கி மன்னார்குடி  யை விட்டு வைக்குமாறு ஊர்க்காரனாக ஒரு விண்ணப்பத்தை   வைக்கிறேன்.




No comments:

Post a Comment